Saturday, September 27, 2014

ரஹ்மானின் அசுர புலம்பல்

சமீபத்தில் ஒரு திரை பாடல் பலரை பித்துப்பிடித்து , கிறங்கடித்து, லூசாக்கி விட்டுருக்கிறது. இந்த பதிவு "என்னோடு நீ இருந்தால்" பற்றியது.



"என்னோடு நீ இருந்தால்" பாடல் பற்றி சிலாகிப்பதற்கு முன்னால், டான் ப்ளாக் (Don Black) ரஹ்மான் பற்றி கூறியதை பார்த்தாக வேண்டும். ரஹ்மான் இசை அமைப்பு முறையை பற்றிய மிகச் சரியான விவரிப்பாக எனக்கு இதுபட்டது. டான் ப்ளாக் ஒன்றும் சாதாரண ஆள் இல்லை. ஆஸ்கார் விருது பெற்ற பாடல் எழுத்தாளர். 1967ஆம் ஆண்டு Born Free படத்திற்கு சிறந்த பாடலாசிரியர்  ஆஸ்கார் வென்றவர்.

டான் ப்ளாக்கின் ரஹ்மான் இசை அமைப்பு முறை பற்றிய வர்ணனை இவ்வாறாக அமையும்.

"ரஹ்மான் கையால்வது போன்ற ஒரு இசை அமைப்பு முறையை அதற்கு முன் நான் பார்த்தது இல்லை. அவர் ஸ்டூடியோவில் நுழைவதற்கு முன்னால் செருப்பை வெளியே கழட்டிவிட வேண்டும். ஸ்டூடியோ அறையில் எப்பொழுதும் ஒரு மெழுகு எறிந்து கொண்டிருக்கும். பிரமாதமான ஒரு இசை கோர்வை அமைந்து கொண்டிருக்கும் போதே திடீரென்று ஸ்டூடியோ அறையை விட்டு வெளியே செல்வார்.திரும்ப வரும் பொழுது, சிரித்து கொண்டே தொழுகையில் ஈடுபட்டதாக சொல்வார்.

மேல் சொன்ன வர்ணனை ரஹ்மான் பற்றி ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது போன்ற eccentrics எல்லா இசை அமைப்பாளர்களிடமும் உண்டு. இதற்கு அடுத்து டான் ப்ளாக் சொல்லும் விஷயம் தான் ரஹ்மான் இசை அமைப்பை நெற்றியடியாக விவரிக்கும்.

"ஒவ்வொரு பாடல் இயற்ற நாங்கள் சந்தித்த போதும் அவருடைய எண்ண ஓட்டம் ஏதேனும் ஒரு ஒற்றை புள்ளியை நோக்கியே செல்லும். அந்த ஒற்றை புள்ளியானது ஒரு வார்த்தையாகவோ, வரியாகவோ இருக்கும். அந்த ஒற்றை புள்ளியின் மேல் அவர் மெனக்கெட ஆரம்பிப்பார். கீபோர்டில் அந்த ஒற்றை புள்ளியை முனகிக் கொண்டே விளையாடுவார்."

ரஹ்மான் கீபோர்டில் விளையாடி கொண்டே முனகும் பிம்பத்தோடு மேலும் படியுங்கள்.

"ரஹ்மான் எந்த ஒரு புற சூழ் நிலையும் அவரை பாதிக்க விடமாட்டார். அவரை பொறுத்த வரை It has to happen.ரெக்கார்டிங் செஷன் ஒன்றிற்கு நாற்பது வயிலின் கலைஞர்களை அழைத்து விட்டு அவர்களுக்கு வாசிக்க ஒரு நோட் கூட இல்லாத சூழ் நிலையை ரஹ்மானோடு நான் சந்தித்தேன். ஆனால் அந்த ஒற்றை வரி முனகலில் ஆரம்பித்து 30 நிமிடங்களில் 40 வயலின்கள் முழங்க அற்புதமான ஒரு இசை கோர்வையை இசைத்து காட்டினார்."

மேல் சொன்ன விவரணை உங்களுக்கு புரிந்தால் ரஹ்மான் இசை உங்களுக்கு இன்னும் நன்றாக புரிய ஆரம்பிக்கும்.
  • சின்ன சின்ன ஆசையின் interludeல் வரும் ஏலேலோ ஹம்மிங்
  • டேக் இட் ஈசி ஊர்வசி தொடக்கத்தில் வரும் மறுகபா ஹம்மிங்

போன்றவை வெறும் ஹம்மிங் இல்லை. ரஹ்மான் இசை அமைப்பு முறையின் சுவடுகள். இது போன்ற ஒற்றை வரியை எடுத்து கொண்டு அதன் மீது improvise செய்வது ஹிந்துஸ்தானி,சுபி இசை அமைப்புகளில் பிரபலம். ஹரிஹரன் ரஹ்மான் பாடல்களில் ஸ்பெஷலாக இருப்பதற்கு காரணமும் இதுதான். Rahman's music has hell lot of space to improvise.

இப்பொழுது "என்னோடு நீ இருந்தால்" பாடலை இன்னொரு முறை கேட்டு பாருங்கள். ரஹ்மான் கீபோர்ட முன் அமர்ந்து புலம்புவது போன்ற பிம்பம் விரிகின்றதா ?

"என்னோடு நீ இருந்தால்" ஜாஸ் (jazz) இசை சார்த்து. ஜாஸ் இசை அமைதி அற்ற நிலையை விளக்க பெரிதாக பயன்படுமாம். "Jazz is restless. It won't stay put and it never will." Jazz,Reggae,Irish-folk ஆகியவை தனக்கு பிடித்தவை என்று ரஹ்மான் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். இன்பாக்ட் "சின்ன சின்ன ஆசை" பாடலில் ரெக்கே இசை சாயல் உண்டாம்.

"என்னோடு" பாடலை கேட்கையில் இருள், வலி, அமைதி அற்ற நிலை இவை கொண்டு ஒருவன் பாடும் புலம்பலாக பட்டது. "என்னோடு நீ இருந்தால்" என்ற ஒற்றை புள்ளியில் சிட் ஸ்ரீராம் மறுகி உருகி பாடியிருக்கிறார். "தம்பி சிட்! பீர் சிகரட்னு கெட்ட பழக்கம் பக்கம் போய் குரலை உட்றாத. You have a magic in it, unlike anything else."

ஆனால் பாடலில் எனக்கொரு மிகப்பெரிய குறை. சத்தியமா ஒரு வரி கூட தெளிவா புரியல. ஒரு பீலிங் கொண்டு வர வேணும்னே செய்ததா என்னேனு புரியல. ஆனா இதே மாறி போனா நிச்சயமா தமிழ் இனி மெல்ல சாகும்.

கபிலன் எழுதிய பாடல் வரிகளை தேடித் படித்தேன். Nothing special in it. இருளுக்கும் வெளிச்சதிற்குமான ஒரு சண்டையை,வலியை பெரிதாக வரிகள் உணர்த்தவில்லை. நான் ஒரு வைரமுத்து வெறியன் என்பதனால் அப்படி பட்டதோ ? Anyways, its personal preference.

"என்னோடு நீ இருந்தால்" ரஹ்மான் என்ற ராட்சதனின் அசுர புலம்பல். காலத்திற்கும் ஒலிக்கும்.


Monday, September 22, 2014

சின்ட்ரெல்லா (என்னும் ராட்சஷி)


"ஓட்ற ட்ரெயின்லேந்து தள்ளி உட்ருவோம்."

"அவன் பிரியாணிக்கு உயிரையே விடுவான். அந்த பிரியாணிலயே விஷம் வச்சு உயிர எடுத்திடுவோம்."

"அதெல்லாம் சரிப்படாது. சிம்பிளா மணல் லாரி ஏத்து."

தீனா எல்லாவற்றையும் கேட்டவாறு அமைதியாக கீழே பார்த்து கொண்டிருந்தான்.

"இதெல்லாம் ஒர்கவுட் ஆகாதுன்னா ஒரு செம விஷயம் சொல்றேன். கொரியன் சைக்கோ படத்துல பார்த்தது."

"டேய் ! சும்மா காமெடி பண்ணாதீங்க. இது ஒரு பாண்டஸி படம். அதுக்கு ஏத்த மாதிரி எதாவது உருப்படியா யோசிங்கடா."

எதாவது புதுமையான யோசனை சிக்காதா என்ற தீனாவின் ஆதங்கம்.

"நாளைக்கு சாயங்காலம் கிளைமாக்ஸ் சீன் டிஸ்கஷன். எதாவது உருப்படியா பாயிண்ட் சொல்லி டைரக்டர கவுக்கனும்.

"இந்த பாயிண்ட் கேள்..."னு ஒரு சகா சொல்லும் போதே தீனாவின் செல்போன் ஒலித்தது. சுவேதா. காலையிலேந்து மூணு தடவை கால் பண்ணிட்டா. இதுக்கு மேல எடுக்கலேனா பிரச்சனை ஆயிடும்னு தீனா வெளியே வந்தான்.

"ஹலோ ! எத்தனை தடவை கூப்பிட்றது". சுவேதா கோபம் காட்டினாள்.

"மூடு சரி இல்ல. எதுக்கு போன் எடுத்து உன்னை வெறுப்பேத்தனும்னு விட்டுட்டேன்."

"போடா லூசு. நீயும் உன் மூடும். எங்க வீட்ல என்னாச்சு தெரியுமா ?"

"மெகா சீரியல் பார்க்கும்போது கரண்ட்போயிடிச்சா !"

"அய்யோ ! நான் கர்ப்பமா இருக்கேன்னு அப்பாகிட்ட சொல்லிட்டேன்."

புஜம் பொருந்திய ஹிந்தி வில்லன் கம்பியால் நச்சென்று நடு மண்டையில் அடித்தது போல இருந்தது தீனாவிற்கு.

"என்னமா சொல்ற !"

"நான் என்னடா பண்றது. நாம லவ் பண்றது எங்க வீட்டுக்கு தெரிஞ்சு ஆறு மாசமாகுது. அப்பாகிட்ட வந்து பேசுன்னு எவ்வளவோ சொல்லியும் நீ கேக்கல."

தீனா சுதாரித்து காம்பௌண்ட் கேட்டை பிடித்து கொண்டான்.

"இன்னைக்கு அப்பா ஓவரா போயி அவரோட நண்பர், அவர் பையன்னு ஒரு கோஷ்டிய கூட்டிட்டு என்னை பொண்ணு பார்க்க வர வெச்சுட்டாரு."

ரூமிலிருந்து நண்பர்கள் ஒவ்வொருவராக வெளியே கசிய தொடங்கினர்.

"அதான் ஒரு பொய் சொல்லி அவர வெறுப்பேத்திட்டேன்."

"பொய்யா..." தீனாவின் நிம்மதி பெருமூச்சு.

"ஆமா நீ என்ன நினைச்ச."

"சே ! சே ! நான் என்ன நினைக்கறது."

"ஆனா அப்பா நான் எதிர்பார்த்ததுக்கு மேலே டென்ஷன் ஆகிட்டாரு. அவர் பாக்டரில வேலை பாக்கற பசங்களுக்கு எல்லாம் போன் பண்ணி வர வெச்சிருக்காரு"

"அடிப்பாவி. நான் தீனாவ தான் கல்யாணம் பண்ணுவேன். இல்லேனா வெஷம் குடிச்சிடுவேன்ற மாதிரி பிரச்சனை இல்லாத டயலாக் பேசியிருக்கலாம். பேபி-ப்ரக்னன்ட்னு தேவையில்லாம வாயை குடுத்து என்னை அடி வாங்க வைக்கறியே."

"அதான் காலையிலேந்து போன் பண்ணிகிட்டே இருந்தேன். நீ ரூம்ல இருக்காத. எங்கயாச்சம் வெளிய போய்டு. நான் அப்பாகிட்டே பேசி சமாளிச்சிட்டு உனக்கு போன் பண்றேன்"

"உங்க அப்பா அனுப்பற ஆளுங்க என்னை உயிரோட விட்டா போன் எடுக்கறேன்,"

"அழாதடா."

"போடி ! நல்லா மாட்டிவிட்டுட்டு அட்வைஸ் வேற குடுக்கற."

தீனா சகாக்களிடம் ஏதோ பொய்யை சொல்லி சமாளித்துவிட்டு பைக்கை கிளப்பிக்கொண்டு பறந்தான். 300சிசி பைக் வாங்கியது உபயோகமாகவே இருந்தது.

மதிய உணவு வேலை நெருங்கி இருந்ததால் அந்த டீக்கடையில் அவ்வளவாக டீ செல்லுபடியாகியிருக்க கூடாது.

"சினிமா துணுக்கு எழுதறது லேசுன்னு நினைச்சியா ! ஒவ்வொரு துணுக்கும் ஒரு மினி ஸ்க்ரீன்ப்ளே". சத்யன் மெய்யாகவே ஆதங்கப்பட்டார்.

சிகரெட் புகைப்பவர்கள் புகையை சமன் செய்ய டீயையே விரும்புகின்றனர். டீ மாஸ்டர் விறுவிறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்.

"என்ன இருந்தாலும் ஒருத்தன பத்தி தப்பா எழுதறது தப்பு தான சத்யன்."

ரிப்போர்ட்டர் சத்யனுக்கு இது ஒரு பிடித்தமான கேள்வி. தேர்ந்த மேடை பேச்சாளர் தோரணையில் இதற்கு பல முறை பதிலளித்திருக்கிறார்.

"என்ன பாவம். ஒரு சம்பவம் நடக்குது. அத மக்கள் விரும்பற மாதிரி விதத்தில நாங்க எழுதறோம். அவ்வளோதான். இதுல என்ன தப்பு இருக்கு."

சிகரெட்டை சீராக இழுத்து விட்டுக்கொண்டார்.

டீக்கடைக்கு முன் பைக்கை நிறுத்திய தீனா, பைக் சாவியை பிடுங்கிய வாறே சைடு ஸ்டான்ட் போட்டு கீழே இறங்கினான். பின்னால் மறைவாக வந்து நின்ற காரை அவன் கவனித்திருக்க வாய்ப்பில்லை.

ரிப்போர்ட்டர் சத்யன் கடை ஓரமாக நின்று கொண்டு யாருடனோ பேசிகொண்டிருந்ததை பார்த்தான். யதேச்சையாக அவரும் தீனாவை பார்த்து கை காட்டினார்.

"என்ன சார் ! ஓரமா நின்னு யார பத்தி புகைச்சிட்டு இருக்கீங்க."

"போன வாரம் ஒரு ட்விட்டர் கவிதை போட்டிருந்தேனே, பாக்கலையா ?"

"இல்லையே."

"சுவாரஸ்யம் !
பேருந்தின் ஜன்னலோரம்
பீட்சாவின் கருகிய ஓரம்
டீக்கடையின் ஆளில்லா ஓரம் !"

"சூப்பர். இதுக்கு முன்னபின்ன எதாவது கோரஸ் சேத்து கத்தவிட்டு வீடியோ எடுத்திட்டா அடுத்த கொலை வெறி இதான்."

அப்பொழுது எழுந்த சிரிப்பொலி அப்படி சட்டென்று நிற்கும் என்று தீனா எதிர்பார்க்கவில்லை. நீண்ட முடி தரித்த முரட்டு ஆசாமியின் கத்தி வீச்சு வயிற்று ஓரத்தை கடந்து குருதியை எட்டிப் பார்க்க வைத்தது.

விடாமல் சிணுங்கிய செல்போனை குளித்து கொண்டிருந்த சுவேதா ஓடி வந்து எடுத்தால். "ஹலோ ! சுவேதா இருக்காங்களா ?"

"என்ன தீனா புதுசா கேக்கற. குரல் வேற மாதிரி இருக்கு."

"நான் தீனா இல்லைங்க. கேளம்பாக்கம் பிரிட்ஜ் பக்கதிலேந்து பேசறேன். இங்க ஒரு பைக்,போன் எல்லாம் தனியா கீழ கடக்குது. சுத்தி ரத்த கரையா இருக்கு. ஏதோ ஆக்சிடெண்டுனு நினைக்கிறன். ஆனா பக்கத்தில யாரும் காணும். போன் எடுத்து பாத்ததுல கடைசியா உங்க நம்பர்லேந்து தான் கால் வந்திருக்கு."

சுவேதாவின் படபடப்பில் அவள் கட்டியிருந்த துண்டு மெல்ல அவிழ தொடங்கியது - கடவுளே ! இந்த பைத்தியம் தப்பிக்க தெரியாம அப்பா ஆளுங்க கிட்ட மாட்டிகிட்டான் போல.

முடிவுக்கு வந்தவளாக அவசர கதியில் உடை அணிந்து ஸ்கூட்டி சாவியை எடுத்து கொண்டு வெளியேறினால். லேசாக தலை சுற்றியது.

மருத்துவமனையின் அடங்கா பரபரப்பிலும் டாக்டர் சுரேஷ் அமைதியாக இருந்தார். அவர் கையில் சுடச்சுட வந்திருந்த பேஷன்ட் சத்யனின் ரிப்போர்ட்.

"கத்தி நல்ல வேளை குடலை ரொம்ப குத்தி புண்படுத்தல. ரத்தம் வெளியேறி இருக்கு. கட் வூண்ட் ஸ்டிட்ச் போட்டிருக்கோம். ஆனா பெரிசா ஒண்ணும் கவலைப்படறதுக்கு இல்லை."

டாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு வெளியே வந்த தீனா, தெரிந்த முகம் ஸ்ட்ரெட்சரில் போவதை கண்டு அதிர்ந்தான். ஸ்ட்ரெட்சரில் சுவேதா.

சுவேதா நினைவு திரும்பிய போது அறையின் மெதுவான ஏசி சத்தம் கேட்டது. பினாயில் வாசம் வேகமாக நாசியில் நுழைந்து முழிப்பை அவசரப்படுத்தியது. படுக்கை அருகில் கலங்கிய நிலையில் தீனா.

"நீ எப்படி இங்க." சுவேதா.

"நீ எப்படி கேளம்பாக்கம் பிரிட்ஜ் பக்கத்தில ஸ்கூட்டில விழுந்து கெடந்தேன்னு நான் தான் உன்ன கேக்கணும்." இருக்கற பிரச்சனை போதாதுன்னு இது வேறயா என்பது மறை கேள்வியாக இருந்தது.

"எங்க அப்பா ஆளுங்க கிட்ட நீ மாட்டலையா ? "

ரிபோர்ட்டர் சத்யன் அந்த பிரபலத்தின் மீது எழுதிய துணுக்கு அவரை ரொம்பவே பாதித்திருந்தது. முரட்டு ஆசாமியை வைத்து கத்தியால் வஞ்சித்துவிட்டார். அருகிலிருந்த தீனா அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தான். அப்போது அவசரத்தில் கீழே விழுந்தது செல்போன். யாரோ ஒரு அதிகப்பிரசங்கி போனை எடுத்து சுவேதாவை அழைக்காமல் இருந்திருந்தால் பிரச்சனை குறைந்திருக்கும். விதி ! தீனாவை தேடி பதற்றத்துடன் ஸ்கூட்டியில் வந்த சுவேதா பிரிட்ஜ் அருகே மயங்கி விழுந்திருந்தால்.

குளுகோஸ் பாட்டில் சரி செய்ய வந்த நர்ஸ் கோபம் தாங்க முடியாமல் கேட்டுவிட்டால்.

"ஏம்மா ! கர்ப்பமா இருக்கும் போது வண்டி ஓட்டலாமா ! எதாவது ஆகியிருந்தா எவ்வளோ கஷ்டம்."

"என்ன சொல்றீங்க ! நான் கர்ப்பமா இருக்கேனா ?"

"சரியா போச்சு ! உங்களுக்கு தெரியும்னு நினைச்சேன். உங்கள சேர்க்கும் போது எடுத்த ரிப்போர்ட்ல வந்திருக்கு. நீங்க ரெண்டு மாசம் கர்ப்பம்."

பின் குறிப்பு:
இந்த கதையின் தலைப்புக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் குழம்பியிருக்கலாம். தொடர்பு உண்டு. தீனா கிளைமாக்ஸ் காட்சி யோசித்து கொண்டிருந்த வெளி வராத படத்தின் பெயர் "சின்ட்ரெல்லா என்னும் ராட்சஷி".

Tuesday, September 16, 2014

ஷங்கரின் காண்டிலீவர் பிரா



Scarface - அல்பசினோ நடித்த 1983ஆம் ஆண்டு படமாகத்தான் பிரபலம். உண்மையில் அது ஒரு ரீமேக். 1932ஆம் ஆண்டு வெளிவந்த அதே பெயிரிலான ஐகானிக் படத்தின் ரீமேக். சரி, Scarface புராணம் இப்போ ஏன் ? 1932ஆம் பதிப்பின் தயாரிப்பாளர் ஹோவர்ட் ஹுக்ஸ் (Howard Hughes). "அட ஆமால !"  சொன்னிர்களா ? இல்லனாலும் பரவாயில்ல. தொடர்ந்து படியுங்கள்.

ஹோவர்ட் ஒரு லட்சிய வெறியன். வெறியனை அடிக்கொடிட்டு படிக்கவும். ஆபிஸ் போய்டு வந்து, பத்து பக்கமேனும் படித்து, ரெண்டு FB அப்டேட் போட்டு, வாரம் ஒரு ப்ளாக் போஸ்ட் எழுதி, அந்த வாரம் வந்த படம் பார்த்து, பஜகோவிந்தம் எழுதியது 8ஆம் நூற்றாண்டா 9ஆம் நூற்றாண்டா என்று தேடிப்பிடித்து வாழ்பவனை கூட - "எப்படிப்பா உன்னால மட்டும் இவ்ளோ விஷயம் செய்ய முடியுது" என்று வியப்போற்கு ஹோவர்ட் ஒரு விசித்திர ஜந்து. உலகின் மிகபெரிய விமான கம்பெனி முதலாளி, விமான வடிவமைப்பு  பொறியாளன், ஆகச்சிறந்த விமான ஓட்டி, சினிமா இயக்குனர், தயாரிப்பாளர், 19 வயதில் அறக்கட்டளை ஆரம்பித்தவன், அரசியல் சாணக்கியன், வாரம் ஒரு பெண்ணை மணக்கும் ரோமியோ என்று பிரமாத படுத்திய மனுஷன்.

Aviator சினிமா பார்த்தீரா ? ஆமா... யு காட் தி பாயிண்ட். Aviator படம் ஹோவர்ட் ஹுக்ஸ் வாழ்க்கை சித்திரம். அசல் உலக டிகாப்ரியோ இப்படி இருப்பான் .


Aviator படத்தில் ஹோவர்டின் வெறிபிடித்த சினிமாகாரன் என்ற கோணம் அற்புதமாக சித்திரிக்கபட்டிருக்கும். உதாரணத்திற்கு படத்தில் ஒரு வசனம் -
"All right Boys ! I want to bring up something like this. Should give proper uplift ratios and reduce need for torque support on the front. We are not getting enough of the breasts"

இவர் எடுத்த The  Outrage என்ற படத்தில் ஹீரோயினி மார்பகம் சரியாக படம் பிடிக்க பிரத்யோக காமிரா வடிவமைத்து, இன்றளவும் பெண்கள் அணியும் காண்டிலீவர் கப் பிராவை வடிவமைத்தான். டேய் ! சத்தியமா சொல்றேன், ஹோவர்ட் நீ ஒரு கலா ரசிகன்டா.

அது சரி, ஹோவர்ட் ஹுக்ஸ் பத்தின குபீர் செய்தி ஏன் ?

'ஐ' !

'ஐ' trailer பார்த்தேன். ஷங்கரின் ஹோவர்ட் ஹுக்ஸ்தனம் கொப்பளித்தது. மெனகெடுதல் - இது தான் வேணும் பிடிவாதம் - காத்திருக்கும் கொக்கு. மாண்டேஜ் ஷாட்களாக  ஓடின.


ஷங்கரின் எந்திரன், சினிமா வெறியர்களால் கிழித்து கோமணமாக்கப்பட்ட படம். படத்தில் ஏகப்பட்ட ஓட்டை ஒடசல்கள் உண்டு. முதல் ஓட்டை ரஜினி உட்பட. ஆனால் கதை கரு பிரமாதமாக இருக்கும்.

Humanoid - மனிதனால் படைக்கப்பட்ட மனிதனை போன்ற ஜந்து. Man plays a silly God through Humanoids. அவைகள் செய்ய தகாதது ஏதும் உண்டா ? பல உண்டு. முக்கியமாக ரெண்டு - காதல், சூது. இவை இரண்டும் அதற்கு இயல்பாய் வராது. வரவைத்தால் ? அசிமோவ் விதி மீறல் செய்தால் ? என்னாகும் ?

சிலபல பத்தாண்டுகளுக்கு பிறகு எந்திரனுக்கு யாரேனும் மறு உயிர் பாய்ச்சலாம். 1932ஆம் Scarfaceஐ மிஞ்சிய 1983ஆம் ஆண்டு Scarface போல அதுவும் பலே வெற்றி பெறலாம் !

பை தி பை - 'ஐ' கதை கருதான் என்ன ?

படத்தில் விக்ரம் ஒரு மாடல். மாடலிங்கில் வெற்றி பெற உடம்பை வில்லாக வளைக்கிறார். அளந்து அளந்து சாப்பிடுகிறார் -  ஸ்டேராய்ட்ஸ் (Steroids) உட்பட. அளவுக்கு மிஞ்சிய அமிர்தம் நஞ்சு. Steroids விக்ரம் உடல் கூரை மாற்றுகிறது. குரங்கு மனிதனாகிறார். குரங்கு சேட்டை  ஆரம்பம் !


Pages