பயம் ! மனிதனுக்கு படைக்கப்பட்ட முக்கியமான உளவியல் கூறு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு கொலைகாரன்,காமுகன்,இனவெறியன் ஒளிந்திருக்கிறான். பயம் என்ற உளவியல் போர்வை விலகும் பொழுது அவன் வெளிப்படுகிறான். பயம் இல்லா உலகம் கொடும்பாவிகள் உலவும் நந்தவனமாக மாறும்.இந்த சித்தாந்தங்களை யோசிக்கவோ,போதிக்கவோ நான் ஒன்றும் ஞானி அன்று. இதுவரை பதினேழு கொலைகள் செய்த சாதாரண நந்தவனத்தில் உலவும் ஒரு கொடும்பாவி.
"எல்லாம் ரெடியா ?"
"பக்கா ப்லான்னிங்கு. எட்டற மணிக்கு ஆபீஸ் முடிஞ்சு வீட்டுக்கு கெலம்புவன். ஒம்போது மணிவாக்ள தேனாம்பேட்டை சிக்னல் தாண்டி டீ கடை. டெய்லி நிப்பாட்டி தம் போடுவான். ஊர்கதை உலககதைனு அரைமணி நேரமாவது பேசுவான். நம்ம பய அதுக்குள்ள பைக்ல பெட்ரோல எடுத்துறுவான்."
"பார்ட்டி உசாரு ! சந்தேகம் வராம பண்ணனும்."
"அத பத்தி நீ கவலை படாத. நம்ம பையன் சம உசாரு. வண்டில வண்ணன்தோப்பு முக்கு வரைக்கும் போறதுக்கு பெட்ரோல் இருக்கும். அங்க வெச்சு நீ அவன போட்ரு."
கூலிக் கொலையாளிகள் கூட்டத்தில் இரண்டு விதமான நுட்பங்கள் தேவை. ஒன்று - ஒரு நபரை தொடர்ந்து சென்று அவரை கவனித்தால்,அவரது பலவினங்கள் அளவிடுதல், கொலை செய்ய சரியான இடம்,பொருள்,ஏவல் ஆகியன திட்டமிடுதல். இதற்கு சிறிது புத்தி கூர்மையும் நிதானமும்
தேவைபடுகிறது. ஆனால் இறுதியான 'கொலை' என்ற உச்சகட்ட வன்ம செயலுக்கு மிகபெரிய ஒரு முட்டாள் தனம் தேவை. அதனால்தானோ என்னவோ இன்றுவறையில் கொலை செய்வதற்கு எனக்கு சொற்ப பணமே தரப்படுகிறது
"பார்ட்டிக்கு எவ்ளோ வயசு இருக்கும்." என் கையில் ஒரு போட்டோவை கொடுத்துவிட்டு நகர்ந்தான். அதில் சுமார் நாற்பது வயது ஒத்த ஒரு சாமானியன் சிரித்து கொண்டிருந்தான்.
அன்று தனது சராசரி அரை மணிநேரம் தாண்டியும் யாருடனோ எதையோ சுவாரஸ்யமாக பேசிகொண்டிருந்தான். கடைசியாக தெரு நாய்க்கு ஒரு பிஸ்கட் துண்டை வீசி விட்டு பைக்கை செலுத்தினான். நானும் சிறிது தொலைவில் பைக்கை பின்தொடர்ந்தேன். வண்ணாந்தோப்பு சந்து நெருங்கியது. இங்கு எங்கேனும் தான் வண்டி பெட்ரோல் வற்றி நிற்கவேண்டும். பைக் நிதானமான வேகத்தில் சென்று கொண்டே இருண்டது. அவன் வீடு சேரும் வரை.
"பைக்க லேம்ப் போஸ்ட் கீழ நிப்பாட்டி இருக்கான் . வண்டிய அங்க வெச்சு தொடறது ரிஸ்க்குன்னு பையன் திரும்ப வந்திட்டான். உடு! இன்னைக்கு இல்லேனா நாளைக்கு சிக்கிடுவான். நீ ஆபீசிக்கு போய் உன் அமௌண்ட வாங்கிக்க. அப்பரும் கூப்பிடறேன்" செல்போன் குரல்
அமைதயுற்றது.
திரும்பி செல்கையில் எதிர்பாராமல் வண்டி நகர மறுத்து நின்றது. தூரத்தில் யாரோ நடந்து வருவது தெரிந்தது. அருகில் வந்தபோது தெரிந்தது - போடோவில் பார்த்த நாற்பது வயது சாமான்யன். லுங்கிக்கு மாறியிருந்தார். பேண்டில் மறைத்திருந்த தொப்பை, லுங்கியில் மறைய மறுத்து வெளிப்பட்டது.
"என்ன தம்பி. வண்டில பெட்ரோல் இல்லையா."
மெளனமாக அவரை பார்த்தேன்.
"நைட்ல இந்த ஏரியால பங்க் எதுவும் தொரந்திருக்காதே.ஒண்ணு பண்ணுங்க. நம்ம வீடு இங்கேர்ந்து பக்கம் தான். வண்டிய இங்கயே போட்டு வாங்க. வீட்ல நம்ம வண்டி நிக்குது. அதல பெட்ரோல் எடுத்து பாட்டில்ல புடிச்சுகோங்க ."
இருவரும் வீடு நோக்கி நடக்கையில் கேட்டார் "தம்பிக்கு என்ன வேலை ".
No comments:
Post a Comment